ஈரோடு அருகே கீழ் திண்டல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மதன்குமார் (21) மரணம் தொடர்பான வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் தற்கொலை செய்யவில்லை என்பதும், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி சுஜித்ராவை (19) போலீசார் கைது செய்துள்ளனர்.
கீழ் திண்டல் பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகனான மதன்குமார், கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர், உறவினரான சுஜித்ராவை காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி இரவு மதன்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாக கூறி, உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போது, சுஜித்ரா தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர், மதன்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்யவில்லை என்பதும், தலையில் ஏற்பட்ட அடிபாட்டால் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுஜித்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததும், சம்பவ நாளன்று மதுபோதையில் மதன்குமார் வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது. அப்போது, சுஜித்ரா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்ல விரும்பியதாக கூற, அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மதன்குமார் சுஜித்ராவின் கழுத்தைப் பிடித்ததாகவும், அதிலிருந்து தப்பிக்க சுஜித்ரா அவரை தள்ளியதில், அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கணவரை கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடியதாக சுஜித்ரா மீது குற்றம் சாட்டப்பட்டு, அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
