திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோவிந்தாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாபுவின் இரண்டாவது மகள் தனஸ்ரீ (8), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றதாக கூறி வீடைவிட்டுச் சென்றார்.

ஆனால் காலை 10 மணியளவில் பள்ளி நிர்வாகத்தினர் தொலைபேசி மூலம் தனஸ்ரீ பள்ளிக்கு வரவில்லை என்று தகவல் தெரிவித்ததால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கப் பகுதிகளில் சிறுமியை தேடி பெற்றோர் அலைந்தும் எந்த தடையையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து பாபு, ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தாபுரம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இன்று அதிகாலை அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் குடுகுடுப்பைக்காரர்கள் 3 பேர் சுற்றித்திரிந்ததைக் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, சிறுமி மாந்திரீகத்திற்காக கடத்தப்பட்டாரா என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், குடுகுடுப்பைக்காரர்கள் 2 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.