வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரேம்குமார் (34), போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய பைக்கை அப்புறப்படுத்தச் சொன்ன வாக்குவாதத்தில், தந்தை மற்றும் மகனால் கத்தியால் குத்தப்பட்டுப் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (54). இவர் திருமணியில் உள்ள அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிகிறார்.

இவரது மகன் சக்தி (24), வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை, கோடீஸ்வரனும், அவரது மகன் சக்தியும் கஸ்பா, ஆர்.என்.பாளையம் பஜாருக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர். சாலையோரம் இருந்த லோடு ஆட்டோவில் தக்காளி வாங்குவதற்காக, தங்கள் பைக்கை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி பிரேம்குமார், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பைக்கை அப்புறப்படுத்துமாறு தந்தை மற்றும் மகனிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இருவரும் அதைக் கண்டுகொள்ளாமல் தக்காளி வாங்குவதில் மும்முரமாக இருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த பிரேம்குமார், தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.

இதனால் எரிச்சலடைந்த தந்தையும் மகனும், பிரேம்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி, மூன்று பேருக்கும் இடையே ஒருவரையொருவர் தாக்கும் நிலை ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கி, அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை பிரேம்குமார் சதுப்பேரி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த கோடீஸ்வரன், பிரேம்குமாரைப் பார்த்ததும் தன் மகன் சக்தியை வரவழைத்து, அவரை கொலை செய்வதற்காகக் கத்தியுடன் ஆர்.என்.பாளையம் பஜார் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று, பிரேம்குமாரின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரேம்குமார், இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேம்குமார் இறந்ததை உறுதி செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், பிரேம்குமாரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து கொலையைச் செய்துவிட்டுத் தப்பி ஓடிய தந்தை மற்றும் மகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.