திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே செங்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் மதகில், அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் சிக்கியிருந்தது. இதனை கண்ட உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் பெற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சோத்துப்பட்டியான் தோட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி மகேஸ்வரி (35) என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று கணவன்–மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறையடுத்து, மகேஸ்வரி தனது 3 வயது மகள் கனிஷ்கா ஸ்ரீயுடன் தாய் வீடு செல்ல ஸ்கூட்டரில் புறப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் தாய் வீட்டுக்கு போகாமல், சுல்தான்பேட்டை அருகே உள்ள பி.ஏ.பி. கால்வாய்க்கு சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு ஸ்கூட்டரை கரையில் நிறுத்தி வைத்து, மன உளைச்சலால் வாய்க்காலில் குதித்ததாகவும், அதனால் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் போலீசார் கூறினர்.
இதேவேளை, மகேஸ்வரியின் 3 வயது மகள் கனிஷ்கா ஸ்ரீயின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், அவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
