சீனாவில் லீ என்ற பெண் கடந்த 2015ஆம் ஆண்டு இணையதளம் மூலம் ‘பொம்மை கண்கள்’ ஆர்டர் செய்திருந்த நிலையில், அந்தப் பொருள் தற்போது பத்தாண்டுகளுக்குப் பிறகு டெலிவரி செய்யப்பட்டுள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 515 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,566) செலுத்தி ஆர்டர் செய்த இந்தப் பொருளை லீ முழுமையாக மறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
தனது அலைபேசி எண்ணை மாற்றாத காரணத்தால், பார்சல் வரவிருக்கிறது என்பதற்கான குறுஞ்செய்தியை நவம்பர் 25ஆம் தேதி பெற்று, நவம்பர் 27 அன்று பார்சலைப் பெற்றுள்ளார். ஆர்டர் செய்ததோடு கூடுதலாக ஒரு ஜோடி பொம்மை கண்களும் பார்சலில் இருந்தன. ஆர்டரை டெலிவரி செய்ய ஏற்பட்ட தாமதத்திற்குக் காரணம், உயர்தரமான, குறைபாடற்ற, தரமான கைவினைப் பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும் என்பதே என்று விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த பத்தாண்டுகளாக உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும், ஆனால் ஏற்கெனவே பெற்ற ஆர்டர்களை மட்டும் டெலிவரி செய்து வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆர்டர் செய்த பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களைப் பெற்றுவிட்டதாகவும் விற்பனையாளர் கூறியுள்ளார். இந்தப் பார்சலைப் பெற்ற லீ, தான் ஆர்டர் செய்த கண்களுக்கான பொம்மைகளை ஏற்கனவே விற்றுவிட்டதாகவும், தற்போது இந்த கண்களை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் குழப்பத்துடன் தெரிவித்துள்ளார்.
