உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள அலியாபூர் கிராமத்தில் சொத்துத் தகராறு காரணமாக 30 வயதான ஷ்யோராஜ், தனது 32 வயது சகோதரி சயோகிதாவை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சகோதரனும் சகோதரியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அவர்களின் தாய் ஹுக்கும் தேவி குளியலறைக்குச் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்தபோது, தனது மகள் சயோகிதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார்.

சயோகிதா செவிலியராகப் பணிபுரிந்து வந்ததாகவும், சமீபத்தில் தந்தை பகவான் தாஸ் இறந்த பிறகு, சொத்தில் தனக்குப் பங்கு கேட்டு தனது சகோதரனுடன் சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஷ்யோராஜ் தனது சகோதரிக்குச் சொத்தில் பங்கு கொடுக்க மறுத்ததால், அவர்களுக்கு இடையேயான தகராறு முற்றிய நிலையில், ஷ்யோராஜ் தனது சகோதரியின் தலையில்  வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து, உயிரிழந்த சயோகிதாவின் தாய் ஹுக்கும் தேவி தனது மகன் ஷ்யோராஜுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோஹா எஸ்.பி. அமித் குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.

தற்போது, தலைமறைவான குற்றவாளியைக் கைது செய்ய போலீசார் நான்கு தனிப்படைகளை அமைத்துள்ளனர். விரைவில் குற்றவாளி ஷ்யோராஜ் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.