மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஊழியர் குடியிருப்புக்கு வெளியே, பிறந்த சில நிமிடங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை, பிரசவ இரத்தம் உடல் முழுவதும் ஒட்டிய நிலையில், குளிரான தரையில் தனியாகக் கிடந்துள்ளது.

குழந்தை அருகே எந்தப் போர்வையோ அல்லது குறிப்புச் சீட்டோ இல்லாமல் விடப்பட்டிருந்தது. ஆனால், அதிசயிக்கும் வகையில், விடியும் வரை அக்குழந்தையைச் சுற்றிச் சில தெரு நாய்கள் பாதுகாப்பு வளையம் அமைத்து, குரைக்காமலும், அசையாமலும் விழிப்பாகக் காவல் காத்து அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளன.

நாய்கள் குழந்தையிடம் யாரையும் நெருங்க விடாமல் தடுத்ததை அங்கிருந்த குடியிருப்பாளர்கள் மனிதநேயம் மற்றும் பாதுகாப்பின் ஒரு அற்புத உதாரணமாகக் கருதுகின்றனர். குடியிருப்பைச் சேர்ந்த சுக்லா மண்டல் என்பவர் என்பவர் குழந்தையைக் முதலில் கண்டார். நாய்கள் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் விழிப்புடன் இருந்ததாகவும், குழந்தை உயிர் பிழைக்கப் போராடுவதை நாய்கள் புரிந்து கொண்டது போல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுக்லா உடனடியாகக் குழந்தையைத் தனது துப்பட்டாவால் சுற்றி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முதலில் மகேஷ்கஞ்ச் மருத்துவமனைக்கும், பின்னர் கிருஷ்ணாநகர் சதார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றார். குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், தலையில் இருந்த இரத்தம் பிறப்புக் காயமே என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நவதீப் போலீசாரும் குழந்தைகள் நல அதிகாரிகளும் குழந்தைக்குத் தேவையான நீண்ட கால பராமரிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.