மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் விவசாயி காசிநாத் இவருக்குச் சொந்தமான ஒரு மாடு, சமீபத்தில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தற்போது பருவ சாகுபடி காலம் தொடங்கிவிட்டதால், உடனடியாக மற்றொரு மாடு வாங்க இவரிடம் போதிய பண வசதி இல்லை. விவசாயப் பணிகள் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக, காசிநாத்தின் வயது முதிர்ந்த மனைவி ஹவுசாபாய் மாட்டுக்கு பதிலாகத் தன்னை ஏரில் பூட்டிக்கொண்டு வயலை உழும் கடினமான முடிவை எடுத்தார்.

காசிநாத் ஏரை ஓட்ட, அவரது மனைவி மாடு போல ஏரை இழுக்கும் இந்த நெஞ்சை உலுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்கள் மூலம் மாநில அரசின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, கடந்த ஜூன் 10-ஆம் தேதி கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அவசரமாக அந்த விவசாயிக்கு ஒரு மாட்டை மாற்றாக வழங்கி உதவினர். ஆனால், அரசாங்கம் கொடுத்த அந்த மாடு, வயலில் வேலை செய்யத் தொடங்கிய இரண்டு நாட்களிலேயே அப்படியே கீழே படுத்துவிட்டது.

<a href=”http://

“>

அதனைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், அந்த மாடு ஏற்கனவே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனர். இதனால், உதவிக்கு வந்த மாட்டை வைத்து விவசாயம் செய்வதற்குப் பதிலாக, அதற்கு மருத்துவம் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு அந்த ஏழை விவசாயி தள்ளப்பட்டார். “உதவி என்ற பெயரில் நிர்வாகம் ஒரு நோய்வாய்ப்பட்ட மாட்டை விவசாயியின் தலையில் கட்டி ஏமாற்றிவிட்டது” என அந்தப் பகுதி மக்கள் கடும் கொந்தளிப்புடன் பேசி வருகின்றனர்.

இச்சம்பவம் மீண்டும் சர்ச்சையானதை அடுத்து, மகாராஷ்டிர முதலமைச்சர் தலையிட்டு, அந்த ஏழை விவசாயிக்கு உடனடியாக நல்ல ஆரோக்கியமான, வலுவான மாட்டை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.