ஹைதராபாத்தில் உள்ள குத்புல்லாபூரில் இருக்கும் பூர்ணிமா பள்ளியில், நர்சரி மாணவி ஒருவரைப் பள்ளியின் பணிப்பெண் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை, அருகில் வசிக்கும் ஒரு சிறுவன் தனது தொலைபேசியில் படம் பிடித்துள்ளான்.
இந்தக் கொடூரத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆழ்ந்த அதிர்ச்சியிலும், அதிக காய்ச்சலிலும் அவதிப்பட்டு வருகிறார். உள் காயங்கள் அல்லது மூளை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மக்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான பிறகு, குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட பணிப்பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகாரைப் பெற்ற காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணை முடிந்தபின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
