பீகார் சட்டசபைத் தேர்தல் 22-ந் தேதியுடன் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி. ஷாம்பவி சவுத்ரியின் இரு கைகளிலும் வாக்களித்ததற்கான மை இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்திபூர் தொகுதி எம்.பி.யான ஷாம்பவி சவுத்ரி, முதல்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் போஸ் கொடுத்தபோது , முதலில் வலது கையையும், சிறிது நேரத்திற்குப் பின் இடது கையையும் காட்டினார்.

இரண்டு விரல்களிலும் மை அடையாளம் இருந்ததைக் கண்ட எதிர்க்கட்சிகள், அவர் வாக்கு மோசடியில் ஈடுபட்டு, இரண்டு முறை வாக்களித்தாரா? என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஏற்கெனவே காங்கிரஸ் – ஆர்.ஜே.டி. கட்சிகள் வாக்கு மோசடி குறித்துக் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தச் சட்டவிரோதச் செயல் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, எம்.பி. ஷாம்பவி சவுத்ரி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், “வாக்குச்சாவடி அதிகாரி தவறுதலாக முதலில் என் வலது கையில் மை பூசிவிட்டார்.

பின்னர், தலைமை அதிகாரி தலையிட்டு, நடைமுறைப்படி இடது கையில் பூசச் சொன்னார். அதனால்தான் இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் உள்ளன. இந்தப் பிரச்னையை அரசியல் சர்ச்சையாக மாற்ற வேண்டாம்” என்று கோரிக்கை விடுத்தார். இதை உறுதிப்படுத்தும் விதமாக, பாட்னா மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மை இடும் பணியாளர் தவறுதலாக வலது கையிலுள்ள விரலில் முதலில் மை இட்டதாகவும், பின்னர் தலைமை அதிகாரியின் தலையீட்டால் இடது கையிலுள்ள விரலிலும் மை இடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.