கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் கொரட்டி குன்னல் பகுதியைச் சேர்ந்த தாஸ் (55) என்பவரின் மகன் அகில் (26). காதல் திருமணம் செய்து கொண்டு, தனது மனைவியுடன் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்த நிலையில், அகிலின் மனைவிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரது உடலில் ‘தீயசக்திகள் புகுந்துவிட்டதாக’ அகிலின் குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, பத்தனம்திட்டா பகுதியினைச் சேர்ந்த சிவதாஸ் (54) என்ற மந்திரவாதியை அணுகியுள்ளனர்.
அவர், சில மாந்திரீகப் பூஜைகள் செய்தால் சரியாகிவிடும் என்று கூறவே, அகிலின் குடும்பத்தினர் அதற்கு ஏற்பாடு செய்தனர். அவர்களது வீட்டுக்கு வந்த மந்திரவாதி சிவதாஸ், அகிலின் மனைவியை ஓர் இடத்தில் அமர வைத்து, தொடர்ந்து 10 மணி நேரம் பூஜை செய்துள்ளார். அந்தப் பூஜையின்போது, இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்ததுடன், பீடிச் சாம்பலை விழுங்கச் செய்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, இளம்பெண்ணின் உடலில் பல இடங்களில் தீயால் சூடு வைத்து அவர்கள் சித்திரவதை செய்துள்ளனர். சித்திரவதையைத் தாங்க முடியாமல் இளம்பெண் துடித்துப் போயுள்ளார். இந்த நிலையில், இளம்பெண்ணைப் பார்க்க அவரது தந்தை வந்தபோது, தன்னை கணவர் குடும்பத்தினர் மாந்திரீகப் பூஜை என்ற பெயரில் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கிய விவரத்தைத் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர், அது குறித்துப் போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், இளம்பெண்ணின் கணவர் அகில், மாமனார் தாஸ் மற்றும் மந்திரவாதி சிவதாஸ் ஆகிய மூன்று பேரையும் உடனடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் அகிலின் தாய்க்கும் தொடர்பு இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, தலைமறைவாகி விட்ட அவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
