தற்போதைய காலகட்டத்தில், இளம் தலைமுறையினர் காதல் திருமணங்களில் அதிக நாட்டம் காட்டுவதைப் பிரதிபலிக்கும் வகையில், திருமணம் குறித்து ஒரு நகைச்சுவையான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் இளைஞன் ஒருவரின் வீட்டின் கதவைத் தட்டி, “என் அப்பா உங்களிடம் கொண்டு வந்த திருமண முன்மொழிவை ஏன் நிராகரித்தீர்கள்?” என்று நேரடியாகக் கேட்கிறார்.
அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன், அப்பெண்ணை அமர வைத்து, தான் எடுத்த முடிவுக்குப் பகீர் காரணம் ஒன்றைக் கூறுகிறார். அந்தப் பெண், தனக்கு சமையல், வீட்டு வேலைகள் செய்வது, மாமனாரைப் பார்த்துக் கொள்வது, இரண்டு குழந்தைகளை வளர்த்த அனுபவம், துணிகளைத் துவைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் கைகளால் துவைப்பது உள்ளிட்ட அனைத்துத் தகுதிகளும் இருப்பதாகப் பட்டியலிட்டு, தான் ஏன் நிராகரிக்கப்பட்டேன் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த இளைஞன், “உண்மையில் நீங்கள் சிறந்த இலட்சியப் பெண்தான். ஆனால், உங்களைத் திருமணம் செய்தால், என் வாழ்க்கை அமைதியாகவும் எந்தப் பிரச்சினையும் இல்லாமலும் போய்விடும்” என்று வித்தியாசமான காரணத்தைக் கூறினார்.
தான் ஏன் அத்தகைய குழப்பமற்ற வாழ்க்கையை விரும்பவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கிய இளைஞன், “நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டு, எங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இல்லையென்றால், வழக்கறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் கவுன்சிலர்கள் போன்றோரின் தொழில் முடங்கிப் போய்விடும். இதனால் அவர்களின் குழந்தைகள் பட்டினி கிடப்பதைப் பார்க்க உங்களுக்குச் சம்மதமா?” என்று நகைச்சுவையாகக் கேட்கிறார்.
https://www.instagram.com/reel/DQokXsNkZ3R/?igsh=MTQ2dmh5emRsZTk4bg==
மேலும் அவர், “திருமணச் சண்டைகளால் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவமனை ஊழியர்களுக்கு வேலை கிடைக்கும்; நாங்கள் இறந்துபோனால் சுடுகாட்டு ஊழியர்களுக்கும் வேலை கிடைக்கும். இதுதானே சமூகத்தின் வேலைவாய்ப்புச் சக்கரம்” என்றும் தத்துவம் பேசுகிறார். இதைக் கேட்ட அந்தப் பெண், “நீங்கள் ஒரு மனநோயாளி” என்று கூற, “ஆம், என் நண்பர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள்” என்று இளைஞன் கூறுகிறார். முடிவில், அந்தப் பெண், “நீங்கள் என் முன்மொழிவை நிராகரித்தது எனக்குச் செய்த உதவி, இல்லையென்றால் என் வாழ்க்கை பாழாயிருக்கும்” என்று சொல்லிச் செல்ல, இருவரும் திருப்தியுடன் பேசி முடிப்பது போன்று இந்த பொழுதுபோக்கு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
