அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.
கடந்த 1988-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த பெஞ்சமின், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர், சென்னை மாநகராட்சி துணை மேயர் மற்றும் அமைச்சராகவும் பணியாற்றியவர்.
மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அவர், சமீபகாலமாக அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களால் அதிருப்தியில் இருந்தார். குறிப்பாக, எஸ்.பி. வேலுமணி தரப்பை ஆதரித்ததாகக் கூறி, கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி அவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியிருந்தார்.
திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெஞ்சமின், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மாண்பினாலும், தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையின் மீதான ஈர்ப்பாலுமே தான் திமுகவில் சேர்ந்ததாகத் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகவும், ஆனால் இன்றைய சூழலில் மக்களுக்குத் தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இனிவரும் காலங்களில் திமுக தலைவர்களின் கட்டளைகளை ஏற்று, உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கட்சியின் வளர்ச்சிக்கும் மக்களுக்காகவும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவேன் என்று அவர் உறுதியளித்தார்.
