சீனாவின் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்த குயின் என்பவர், ஹெய்னான் தீவின் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது ராட்சத அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். நீச்சல் தெரியாத அவர், உயிர் பிழைக்கத் தனது உடைகள் மற்றும் நகைகளை அகற்றிவிட்டு, கடலில் மிதந்த ஒரு மிதவையைப் பிடித்துக் கொண்டு 7 நாட்கள் போராடினார்.

அந்தப் பாதையில் சென்ற கப்பல்களிடம் உதவி கோரியும் பலன் கிடைக்காத நிலையில், கடும் பசி மற்றும் தாகத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையை அவர் அடைந்தார். பசியின் கொடுமையைத் தாங்க முடியாமல் அவர் சுமார் 80 பச்சைக் நண்டுகளைப் பிடித்துச் சாப்பிட்டு உயிர் பிழைத்தார்.

இருப்பினும், உப்புநீர் மற்றும் வெயிலின் தாக்கத்தால் அவர் உடல் முழுவதும் கடுமையான புண்களும் தொற்றுகளும் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்தார்.

ஏழாம் நாள், அந்தப் பகுதி வழியாகச் சென்ற செங்மாய் கவுண்டியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குயினை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பச்சைக் நண்டுகளை உண்டதால் செரிமான மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்ததால் அவர் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி குணமடைந்து வருகிறார்.

7 நாட்கள் கடலின் பிடியில் சிக்கி, மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்த குயினின் இந்தச் சம்பவம், மனிதனின் அதீத உயிர் பிழைக்கும் திறனை உலகிற்கு வியப்புடன் காட்டியுள்ளது.