கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவர், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தொடங்கிய இந்தத் தொடர் கொடுமைகள் குறித்து, பாதிக்கப்பட்ட மாணவி தனது நெருங்கிய தோழிகளிடம் அழுதுகொண்டே பகிர்ந்துகொண்ட பின்னர்தான் இந்தத் தலைகுனிய வைக்கும் கொடூரச் செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
தோழிகள் மூலம் தகவலறிந்த பள்ளி நிர்வாகமும், அதனைத் தொடர்ந்து CWC அமைப்பினரும் உடனடியாகத் தீவிரத் தலையீடு செய்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான ஆலோசனைகளையும் பாதுகாப்பையும் வழங்கினர். இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் தந்தை உள்பட மொத்தம் 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வெவ்வேறு காவல் நிலையங்களில் 7 தனித்தனி எஃப்.ஐ.ஆர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது வரை இரண்டு பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் லாட்டரி விற்பனைக்காக நீண்ட நேரம் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த தனிமையைச் சாதகமாகக் கொண்டு, வெவ்வேறு காலகட்டங்களில் இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டில் வசித்து வரும் சிறுமியின் கயவன் தந்தையை இந்தியா கொண்டுவருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும், மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
