தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விளிம்பு நிலை விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையிலும், விவசாயத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கிலும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள ‘அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித்தொகைத் திட்டம்’ வசம் ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

உயர்மதிப்புள்ள வேளாண் திட்டங்களில் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையைக் குறைக்கும் வகையில், அவர்களுக்குக் கூடுதலாக 20 விழுக்காடு மானியம் அளிக்கப்படும். மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் மற்றும் நவீனப் பண்ணைக் கருவிகள் கொள்முதல் செய்ய 70 சதவீதம் வரையிலும், சோலார் பம்பு செட்டுகள் நிறுவ 80 சதவீதம் வரையிலும் மானியம் வழங்கப்படும்.

எவ்வித நீராதாரமும் இன்றித் தவிக்கும் 300 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில், ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைப்பதுடன் மின்மோட்டார் அல்லது சோலார் பம்புகள் நூறு சதவீத முழு மானியத்தில் இலவசமாகப் பொருத்திக் கொடுக்கப்படும்.

பிற முக்கிய வேளாண் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு விவரங்கள்:

பயறு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற ரூ.203.64 கோடி.வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கச் சிறப்பு நிதியாக ரூ.22 கோடி.ஒட்டுமொத்தப் பயிர் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.41 கோடி.தளிர் கீரைகள் ஊக்குவிப்புத் திட்டத்திற்காக ரூ.1.20 கோடி மற்றும் தென்னை விவசாயிகளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளன.

“>

 

நீர்ப்பற்றாக்குறை மற்றும் பொருளாதாரச் சுமையால் சிரமப்படும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு இந்த அறிவிப்புகள் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.