மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரியில் இருக்கும் வனத்துறை விருந்தினர் மாளிகையில், புலி ஒன்று மனிதர் ஒருவரைத் தாக்கி இழுத்துச் செல்வது போன்ற பயங்கர வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. சிசிடிவி காட்சி போன்று இருக்கும் இந்த வீடியோவில், தேதி “31/10/2025” மற்றும் நேரம் “6:42” எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இது சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவம் எனப் பலரும் நம்பிப் பரப்பி வருகின்றனர்.

 

இந்த அதிர்ச்சி வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் சிலர் பயத்தில் உறைந்துபோக, மற்ற சிலரோ இது போலியான வீடியோ என்றும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற போலி வனவிலங்கு வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருவதாகக் கூறி, இது ஏஐ தவறுடன் உருவாக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் சிலர் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.

சந்திரபூர் பிரம்மபுரியில் புலித் தாக்குதல் நடந்ததாகப் பரவும் இந்தக் காட்சி குறித்து, வனத்துறை அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். பிரம்மபுரி வனச்சரக அதிகாரி (RFO) சச்சின் நாரத் அவர்கள், “இந்த வீடியோ பிரம்மபுரியில் எடுக்கப்படவில்லை. இது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், இந்தக் காணொளி டிஜிட்டல் முறையில் அல்லது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ள அவர், புலி நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்தப் பகுதியில், தேவையில்லாத பீதியை ஏற்படுத்தும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சந்திரபூர் பகுதி, தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தின் எல்லைக்குள் வருவதால், அங்கு அடிக்கடிப் புலிகள் தென்படுவது மற்றும் மனித – வனவிலங்கு மோதல்கள் நடப்பது போன்ற நிகழ்வுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.