குஜராத் மாநிலம், சூரத் நகரின் சாயித்புரா பகுதியில், தெருநாய்கள் விரட்டியதால் அச்சத்தில் ஓடிய இளைஞர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்ராஹிம் என்கிற இஜாஸ் அகமது அன்சாரி (38) என்ற இளைஞர், அதிகாலைப் பிரார்த்தனை முடிந்து வீடு திரும்பியபோது, ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் கொண்ட கூட்டம் அவரைத் துரத்தியுள்ளது. பயத்தில் உயிருக்குப் பயந்து ஓடிய அவர், திடீரென தவறி கீழே விழுந்ததில் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு, மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டது.
12 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்தபோது, நாய்கள் ஓடிச்சென்று அவரைத் துரத்துவதும், அவர் கீழே விழுந்ததும் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி வைரலானது . சூரத் நகரில் மட்டும் மாதந்தோறும் 2,000 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், குஜராத்தில் மணிக்கு 19 நாய்க்கடி சம்பவங்கள் நடப்பதாகவும், ரேபிஸ் நோயால் ஆண்டுக்கு 50-க்கும் மேற்பட்டோர் இறப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
