பிரபல பிரிட்டிஷ் யூடியூபர் சாம் பெப்பர், இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, டெல்லியில் உள்ளூர் மக்களுடன் பட்டாசுகளை விளையாட்டாக ஏவி வீடியோ எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, அவர் ஏவிய ஒரு வெடிச்சட்டம் அருகிலிருந்த 8 வயது சிறுமியின் கண்ணில் பட்டு படுகாயம் ஏற்பட்டது. சிறுமிக்கு கண் பார்வை பறிபோகும் அளவுக்கு காயம் ஏற்பட்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சாம் பெப்பர், “இது ஒரு விபத்து, அவர்களும் எங்களை நோக்கிப் பட்டாசுகளை ஏவினர்” என்று கூறியது மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சாம் பெப்பருக்கு 23 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, யூடியூபர் சாம் பெப்பர் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். “இது முற்றிலும் ஒரு விபத்து, யாருக்கும் காயம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
காயமடைந்த சிறுமிக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்ததாகவும், அதற்கான அனைத்து மருத்துவச் செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டதாகவும்” அவர் தனது பதிவில் குறிப்பிட்டார். சிகிச்சை முடிந்த பிறகு, தற்போது அச்சிறுமி நலமுடன் வீட்டில் இருப்பதாக அவர் தெரிவித்தார். ‘லைக்’குகளுக்காகச் செய்யப்படும் இதுபோன்ற ஆபத்தான செயல்கள் கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
