தெலங்காணா மாநிலத்தில் உள்ள மஹபூப்நகர் மாவட்டம், ஜட்செர்லா பகுதியில் கோபால் என்றவர் வசிக்கிறார். அவர் ஆடு மேய்ப்பதோடு சிறப்பு இனக்கோழிகளை வளர்த்து அவற்றை விற்று வருமானம் பார்த்து வந்துள்ளார். ஒரு சனிக்கிழமை கோபாலும் அவரது மனைவியும் ஆடுகளை மேய்க்கச் சென்றபோது, வீட்டில் சிறு மகளை தனியே விட்டுச் சென்றனர். மதிய நேரத்தில் இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரில் வந்து, மகளை மிரட்டி ஒரு கோழியை திருடிச் சென்றனர்.

இந்த சம்பவம் முழுவதும் வீட்டு சிசிடிவி கேமராவில் பதிவாகிவிட்டது. கோபால் வீட்டுக்கு வந்து மகள் சொன்னதும் சிசிடிவி பார்த்து உறுதி செய்து, ஜட்செர்லா போலீசில் புகார் செய்தார். திருடர்கள் அந்த கோழியை அருகிலேயே விற்க முயன்றதை உள்ளூர் மக்கள் பார்த்து கோபாலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே கோபால் சென்று அங்கு இருந்தவர்களின் உதவியுடன் திருடர்களை பிடித்து, கோழியுடன் ஸ்கூட்டரையும் போலீசில் ஒப்படைத்தார்.

ஆனால் அதன் பிறகு திருடர்கள் தவறு செய்துவிட்டதாக மன்னிப்பு கேட்டு விடுதலை வேண்டியதால் கோபால் இரக்கப்பட்டு விடுவிக்கச் சொன்னார். இதையடுத்து போலீசார் எச்சரித்து அனுப்பி, கோழியை கோபாலுக்கு திரும்ப கொடுத்தனர். கோழியுடன் போலீஸ் ஸ்டேஷனில் சுற்றிய கோபால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.