பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியான பாரதீய ஜனதா கட்சி தனது தொகுதி பங்கீட்டையும் வேட்பாளர் அறிவிப்பையும் முடித்துள்ளது. மொத்தம் 101 இடங்களில் போட்டியிடும் பாஜக, நேற்று 71 வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, இன்று இரண்டாவது கட்டமாக மேலும் 12 பேர் கொண்ட புதிய பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் முக்கியமான பெயராக உள்ளார். சில நாட்களுக்கு முன் தான் பாட்னாவில், பாஜக மாநில தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்திருந்தார். உடனே அவருக்கு அலிநகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் தற்போது மிஷ்ரிலால் யாதவ் எம்.எல்.ஏ.வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்து, முன்னாள் ஐபிஎல் அதிகாரி ஆனந்த் மிஸ்ரா புக்சர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்த அவர், இப்போது நேரடி தேர்தல் அரங்கில் களமிறங்குகிறார்.
முசாபர்பூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கு பதிலாக ரஞ்சன் குமார் நிறுத்தப்பட்டுள்ளர். ஹயாகத்தில் ராம் சந்திர பிசாத், கோபால்கஞ்சில் சுபாஷ் கிங் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக வெளியிட்டுள்ள இந்த புதிய பட்டியல், பீகார் அரசியலில் புதிய முகங்களை முன்னிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
