உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில், பிரபல சினிமா பாணியில் போலீசாரின் பிடியிலிருந்து தப்புவதற்காகப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சாலையில் பணத்தை வீசி எறிந்த சினிமாத்தனமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன சோதனையின் போது தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்றனர். அப்போது போலீசாரின் கவனத்தைத் திசைதிருப்பி தப்பிப்பதற்காக, கடத்தல்காரர்கள் தங்களது காரில் இருந்த 100 ரூபாய் நோட்டுகளைச் சாலையில் வாரி இறைத்தனர்.
இருப்பினும், சற்றும் மனம் தளராத போலீசார் கடத்தல்காரர்களைத் தொடர்ந்து துரத்திச் சென்று, காரை மடக்கிப் பிடித்து ஒருவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து அபின், கசகசா, ரொக்கப் பணம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் என மொத்தம் 58.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
