பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பிரபல பிரசாத் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள ஐசியூ (ICU) அவசரச் சிகிச்சை பிரிவில் நள்ளிரவு 3:30 மணியளவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கரும்புகை சூழ்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில், அங்கு சிகிச்சையில் இருந்த 95 வயது பாட்டி ஒருவர் தனது அசாத்திய துணிச்சலால் 20-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக அதே ஐசியூ வார்டில் ஆக்சிஜன் உதவியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த சப்ரா மேக் பகுதியைச் சேர்ந்த ராதா தேவி என்ற 95 வயது பாட்டி, நள்ளிரவில் தீப்பிடித்து அறை முழுவதும் நச்சுப் புகை சூழ்ந்ததைக் கண்டு சற்றும் பதறாமல், தனது முகத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை அவரே தைரியமாக இழுத்துக் கழற்றி எறிந்துள்ளார். பின்னர் தட்டுத்தடுமாறி புகையைத் தாண்டி வெளியே ஓடிவந்து, அங்கிருந்த நர்ஸிடம் சத்தம்போட்டு தீ விபத்து குறித்து அலறியுள்ளார்.

பாட்டி கொடுத்த அவசரத் தகவலால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க, அதிகாரி ராம்நிவாஸ் பாண்டே தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தங்களின் உயிரைப் பணயம் வைத்து ஐசியூவில் இருந்த 15 முதல் 20 நோயாளிகளைப் பத்திரமாக மீட்டு வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றினர்.

ஒருவேளை இந்த வயதான பாட்டி சரியான நேரத்தில் நர்ஸை எச்சரிக்காமல் இருந்திருந்தால் தூங்கிக் கொண்டிருந்த இன்னும் பல டஜன் நோயாளிகள் உயிருடன் கருகியிருப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், ஆபத்தான சூழலிலும் சமயோசிதமாகச் செயல்பட்டுப் பல உயிர்களைக் காத்த இந்த வீராங்கனை பாட்டியின் பேட்டி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒட்டுமொத்த மக்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.