அரிசோனாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தில், மலையேற்றத்தின் போது காயமடைந்த ஒரு நாய் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் அருகே கடினமான ஒரு பாதையில் தன் உரிமையாளருடன் சென்றபோது அந்த நாயால் காயமடைந்ததால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. உரிமையாளர் உதவிக்கு அழைத்ததையடுத்து, மரிகோபா கவுண்டி ஷெரிப் அலுவலகத்தைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் நாய் ஒரு செங்குத்தான இடத்தில் சிக்கியிருப்பதைக் கண்டனர்.
அந்தப் பகுதியின் கடினமான நிலப்பரப்பு மற்றும் அதிக வெப்பம் காரணமாக, நாயை மனிதர்கள் சுமந்து கீழே கொண்டு வருவது பாதுகாப்பானது அல்ல என்று முடிவு செய்யப்பட்டது.
மீட்புக் குழுவினர் மிகவும் கவனமாகச் செயல்பட்டு, காயமடைந்த நாயை சிறப்பு கயிறு மூலமாக ஒரு வீரர் ஹெலிகாப்டரில் இருந்து கீழே சென்று நாயை தூக்கிக்கொண்டு மீண்டும் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டருக்கு கயிறு மூலம் வந்து சேர்ந்தார் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வீடியோவில், பாறை நிறைந்த நிலப்பரப்பின் மீது அந்த நாய் ஒரு மீட்பு வீரருடன் மெதுவாக மேலே இழுக்கப்படுவது பதிவாகியுள்ளது.
மீட்புக்குப் பிறகு, அந்த நாய் உடனடியாக ஒரு அவசர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மீட்புப் பணிக்குச் செலவிட்ட நேரம் மற்றும் இரக்க குணம் காரணமாக, இந்த வீடியோ உலகெங்கிலும் உள்ள விலங்குப் பிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
