ஆந்திர மாநிலம் பாப்பட்லா மாவட்டம் கொலக்கலூவையை சேர்ந்த நாக கணேஷ், குண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஷிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர்.

இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய பெண் தேடி வந்த சூழலில், தெனாலி அருகே எடவூரை சேர்ந்த கீர்த்தி அஞ்சனாதேவி என்ற பெண்ணை நாக கணேஷ்க்கு பார்த்தனர். ஆனால், கணேஷ் உயரம் குறைவாக இருப்பதாகக் கூறி பெண் தரப்பு திருமணத்திற்கு மறுத்துவிட்டது.

ஆனால், முதல் பார்வையில் காதலாகிய நாக கணேஷும் கீர்த்தியும், இருவரும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் செல்போனில் பேசி காதலை வளர்த்தனர். இந்நிலையில், பத்து நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, அமராவதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து, உயிருக்கு அபாயம் இருப்பதாக கூறி நல்லபாடு போலீசாரிடம் பாதுகாப்புக்காக சரணடைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். திருமணம் எளிமையாக நடந்ததால், வரும் நாட்களில் உறவினர்கள் முன்னிலையில் வரவேற்பு விழா நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதன் முன்னிட்டு, நாக கணேஷ் நேற்று வீட்டிலிருந்து நகைகளை எடுத்துச் சென்று வங்கியில் அடகு வைத்து, பணம் வாங்கி வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அதற்குள், இந்த விவகாரத்தில் கோபமடைந்த கீர்த்தியின் தந்தை, தன் மகன் துர்கா ராவிடம் “எத்தனை பேர் இருந்தாலும் வெட்டி சாய்த்து வா” என உத்தரவு விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் துர்கா ராவும், தனது இரண்டு நண்பர்களும் பைக்கில் சென்று, நாக கணேஷை வழியை மறித்து கத்தி கொண்டு மிரட்டினர். துர்கா ராவ் நேரடியாக கத்தியை எடுத்து கணேஷை சரமாரியாக வெட்ட, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொடூர காட்சிகள், அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள், “தாலியில் ஈரம் காயும் முன் கணவரை கொலை செய்த கொடூரம்” என ஆவேசம் தெரிவித்துள்ளனர்.

தற்போது, நல்லபாடு போலீசார் துர்கா ராவ், அவரது நண்பர்கள் மற்றும் கீர்த்தியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சமூக வலைதளங்களில், குற்றவாளிகள் கடும் தண்டனை பெற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.