கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் நேற்று சிபிஐ விசாரணை கோரிய தமிழக வெற்றி கழகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்ததோடு விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என விமர்சித்தது.

அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை உயர்நீதிமன்றம் நியமித்த நிலையில் நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது ஜாமீன் மனு ரத்தானது. பின்னர் ஆதவ் அர்ஜுனா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரிட்டுள்ளதால் அவரும் கைதாக வாய்ப்புள்ளது.

இதற்கிடையில் நாமக்கல் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதியப்பட்ட நிலையில் அவரது முன் ஜாமின் மனு ரத்தானதால் தற்போது அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அடுத்தடுத்து கைதாக இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.