காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (28) என்பவர் லேத் பட்டறை நடத்தி வருகின்றார். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு தேனம்பாக்கத்தைச் சேர்ந்த ஷாலினி (23) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை மற்றும் 3 வயதில் ஆண் குழந்தை உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறுகள் ஏற்பட்டு வந்தன. கடந்த செப்டம்பர் 25ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த நந்தகுமார், கை மற்றும் இரும்புக் கம்பியால் மனைவி ஷாலினியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஷாலினியை அவரது தந்தை மணிகண்டன் தனது வீட்டுக்குச் கொண்டு சென்று, உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஷாலினி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஷாலினியின் தந்தை மணிகண்டன் ஒரகடம் போலீசில் முன்பே புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஷாலினியின் உயிரிழப்பை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கணவன் நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
