தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள சில்வார்பட்டியில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பாடப்புத்தக திருட்டு சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பள்ளியில் இரவு நேரத்தில் ஒரு சரக்கு வேன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாடப்புத்தகங்களை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, கல்வித்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக, அந்த பள்ளியில் பணியாற்றி வந்த பட்டதாரி ஆசிரியர் பாரதிராஜா மற்றும் தூய்மைப் பணியாளர் விஜயன் ஆகியோர், முறையே ராசிங்காபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் போடி 7-வது வார்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து விசாரணையில், பாரதிராஜா மற்றும் விஜயன் ஆகிய இருவரும் இந்த புத்தக திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்த நிலையில், இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) உஷா நேற்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பாண்டியனின் சூழல் சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதால், அவரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
