மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் பெண்களை ஏமாற்றி பணமும் நகையையும் பறித்து தலைமறைவாகி வந்த சூர்யா எனும் நபர், 11-வது முறையாக கல்யாண மோசடியில் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
சென்னை சூளைமேடு பகுதியில் வசிக்கும் 28 வயது இளம்பெண் ஒருவர், திருமணத்திற்கு வரன் தேடும் நோக்கில் தனது விவரங்களை ஒரு மேட்ரிமோனி தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதை பார்த்த சூர்யா என்ற நபர், தன்னை அரசு அதிகாரி என அறிமுகப்படுத்தி, திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து, சில மாதங்கள் காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, சொந்தமாக வீடு வாங்க வேண்டுமெனவும், அதற்காக தன்னிடம் உள்ள பணத்துடன் சேர்த்து சில உதவிகளை கேட்டும் ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார்.
இதனை நம்பிய இளம்பெண், சுமார் 8 லட்சம் ரூபாய் மற்றும் 9 சவரன் தங்க நகைகளை சூர்யாவிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, சூர்யா அவரை தவிர்க்கத் தொடங்கியதோடு, கேள்வி எழுப்பியதற்கு மிரட்டல் தோனியில் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த இளம்பெண் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சூர்யாவை தேடி வந்தனர். சூர்யா அதனை அறிந்து திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த நிலையில், போலீசாரால் பிடிக்கபட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
விசாரணையில், இவர் ஏற்கனவே பல பெண்களை இதேபோல் ஏமாற்றியுள்ளதும், அவர்களிடமிருந்து பணம், நகைகளை பறித்ததும், பின் அவற்றை பயன்படுத்தி சொகுசான வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இவருக்கு எதிராக துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் மட்டும் 10 பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதற்கமைய, சூர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், மீண்டும் 11-வது முறையாக இதே மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணைக்காக காவல்நிலையத்தில் இருந்தபோது, கழிவறைக்குச் சென்ற சூர்யா, அங்கு வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது மாவுக்கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சூர்யா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
