சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் பள்ளி மாணவர்களை ஒரு பொது பாதையாக அழைத்துச் செல்கிறார். அப்போது, வயதான பெண் ஒருவர் அந்தப் பாதையில் செல்லத் தடுக்கிறார். காரணம், அந்த மாணவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் வாதிடுகிறார்.

இது ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை தெளிவாகக் காட்டுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தின் கொல்லங்கரைப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தில் உள்ள பழமைவாத சித்தாந்தங்களை வெளிப்படுத்தியுள்ளது.ஆனால், அந்த நபர் தடையைப் பொருட்படுத்தாமல், பட்டியலின மாணவர்களையும் மற்ற மக்களையும் அந்தப் பாதையாகவே அழைத்துச் செல்கிறார். பள்ளி முடிந்து திரும்பும் போது, அதே வழியாக வர வேண்டும் என்றும் அவர் மாணவர்களிடம் கூறுகிறார்.

இந்தச் செயல், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. காணொளி வைரலானதைத் தொடர்ந்து, பலரும் இதைப் பற்றி விவாதித்து, ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். இது இன்றைய சமூகத்தில் இன்னும் உள்ள ஜாதி பாகுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.