ஈரோட்டைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன் – பதுமேகலாவுக்கும் 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சினை உள்ளதால், சென்னை வடபழனி மன்னார் முதல் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி பதுமேகலாவும் தங்கியுள்ளார்.
இதனால் சஞ்சனா ஸ்ரீ, ஈரோட்டில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தாள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சஞ்சனா ஸ்ரீக்கு பிறந்தநாள். வந்ததால் ஈரோட்டிலிருந்து உறவினருடன் பெற்றோரைப் பார்க்க சென்னை வந்தார். பிறந்தநாளை கொண்டாட மனைவி பதுமேகலா, மகளை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பொரித்த மீன், சிக்கன் பிரைட் ரைஸ் ஆகியவற்றை வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது சஞ்சனா ஸ்ரீக்கு காய்ச்சல் இருந்ததால், மருந்து கொடுத்து தூங்க வைத்தார். மறுநாள் காலையில் மகளை எழுப்பியபோது, எந்த அசைவும் இல்லாமல் இருந்தாள். அவளது வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார், சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சஞ்சனா ஸ்ரீயின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெற்றோரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
