காஞ்சிபுரத்தை சேர்ந்த தேவிகா என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் மதுராந்தக தோட்டத் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதற்கிடையில் கார்த்திக் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த 2020 ஆம் வருடம் தேவிகா ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்தார். அப்போது அதே நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்த வையாவூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருடன் தேவிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி தேவிகா, சரத்குமார் இருவரும் அடிக்கடி பேசி வந்தனர்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் தேவிகா கர்ப்பமானார். அதன்பின் தேவிகாவிடம் கருவை கலைக்குமாறு சரத்குமார் வற்புறுத்தினார். இந்நிலையில் சரத்குமார் திடீரென வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தேவிகா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றார். இது தொடர்பான புகாரில், சரத்குமாரை நம்பி பணம் மற்றும் நகைகளை இழந்து விட்டேன். மேலும் சரத்குமாரின் குடும்பத்தினர் என்னை மிரட்டுவதால் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவிகா கோரிக்கை விடுத்துள்ளார்.