கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டப்பன்குறிச்சியில் தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொயனப்பாடி கிராமத்தில் வசித்து வரும் துரைராஜின் மகன் மணிகண்டன் பி.எட் பயின்று வருகிறார். மேலும் இவர் 3 மாத பயிற்சிக்காக வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சென்ற ஒரு வாரமாக பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது 12ம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் அறைக்கதவு மற்றும் ஜன்னலை தட்டி வினாத்தாள் கேட்டு மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மணிகண்டன் மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை.

இதன் காரணமாக கோபமடைந்த மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்து பயிற்சி ஆசிரியர் மணிகண்டனை தாக்கி உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு ஆசிரியரான ஸ்ரீநிதி ஓடிச்சென்று அவர்களை தடுக்க முயன்றுள்ளார். இருப்பினும் இவரையும் மாணவர்கள் தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து மாணவர்களை தடுத்து நிறுத்தி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய மாணவர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு பயிற்சி ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.