சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடியின் புகைப்படங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள், அந்நாட்டின் முன்னணி சமூக ஊடகமான *’வெய்போ’*வில் வைரலாக பரவி வருகின்றன.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), கூகுள் போன்றவை சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், சீன மக்கள் உள்நாட்டைச் சேர்ந்த ‘வெய்போ’ என்ற சமூக வலைத்தளத்தையே பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

கிட்டத்தட்ட  7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவரது வருகை வெய்போவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக டிரெண்டிங்கில் முதலிடத்தில் இடம் பிடித்திருந்தார்.

ஷாங்காய் மாநாட்டின் வரவேற்பு நிகழ்வுகளில் இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஒன்றாக கலந்துரையாடும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ‘வெய்போ’ தளத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், அதிபர் புதினுடன் பிரதமர் மோடி ஒரே காரில் பயணிக்கும் வீடியோக்களும் அங்கு அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், மோடியின் நடை, உடை, தனிப்பட்ட பாணி, தூய்மையான உருவப்படங்கள், அரசியல் மேதைபோன்ற பாவனைகள் மற்றும் துணிச்சலான முடிவுகள் குறித்து சீனப் பயனர்கள் பெருமையுடன் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தாண்டு ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றது, இந்த மாநாட்டிற்கு உலகளாவிய முக்கியத்துவம் பெற்று வந்தது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள், மோடிக்கு வழங்கப்பட்ட வரவேற்பை மற்றும் அவரது சந்திப்புகளை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளன.