சர்வதேச அரசியல் அரங்கில் மிகப்பெரிய பதற்றத்தையும், புயலையும் கிளப்பிய ஈரான் நாட்டின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் முறைப்படி அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரம் ஒட்டுமொத்த உலக நாடுகளையுமே உலுக்கியது.
“எங்கள் நாட்டின் அசைக்க முடியாத தலைவரை இழந்த துக்கத்தில் இருக்கும் இந்த வேளையில், இந்தியாவின் நட்பு எங்களுக்கு முக்கியம்” என்ற எமோஷனலான பின்னணியில் இந்த அதிரடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், அலி கமேனி மறைந்து 100 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில், தற்போதுதான் அவரது இறுதிச் சடங்குக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் ஜூலை 4ஆம் தேதி தொடங்கி ஜூலை 9ஆம் தேதி வரை டெஹ்ரான், கோம் மற்றும் அவரது சொந்த ஊரான மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் இந்த பிரம்மாண்ட இறுதி ஊர்வலமும், அஞ்சலி கூட்டங்களும் நடைபெற உள்ளன. உலக நாடுகளின் ஒட்டுமொத்தப் பார்வையும் இந்த இறுதிச் சடங்கின் மீது விழுந்துள்ள நிலையில், ஈரான் அதிபரின் இந்த முக்கிய அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அவர்கள் ஈரானுக்குச் செல்வாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு தற்போதைய சர்வதேச ராஜதந்திர வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
