சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ‘ஷினியுஜாய்’ தேசிய புவியியல் பூங்காவில், உலகிலேயே மிக ஆபத்தான ஒரு மளிகைக் கடை அமைந்துள்ளது. செங்குத்தான ஒரு மலையின் பாறைப் பகுதியில், தரையிலிருந்து சுமார் 393 அடி உயரத்தில் இந்த சிறிய மரக்கடை காற்றில் தொங்குவது போல வியக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மலைப் பகுதியில் மலையேற்றம் செய்யும் சாகச வீரர்களுக்குத் தேவையான குடிநீர், குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்களை வழங்குவதற்காகவே இந்தத் தனித்துவமான கடை உருவாக்கப்பட்டுள்ளது. இங்குச் சென்று பொருட்கள் வாங்குவதற்கு சாகசப் பயணிகள் தங்கள் உயிரையே அடகு வைக்க வேண்டிய அளவுக்கு இது மிகவும் அச்சுறுத்தலான இடத்தில் உள்ளது.

இந்தக் கடையில் வேலை செய்யும் பணியாளர்கள், மலையேறுபவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தங்கள் பைகளில் சுமந்து கொண்டு, தினமும் ஆபத்தான பாதையில் ஏறி இக்கடைக்கு வந்து சேருகின்றனர்.

அதுமட்டும்மல்லாமல் மலையேறும் சாகசப் பயணிகளுக்குத் தாகம் மற்றும் பசியைத் தீர்க்க இக்கடை பெரும் உதவியாக இருந்தாலும், மிகவும் குறுகிய மரப்பலகையின் மீது இது கட்டப்பட்டுள்ளதால், அங்கு நின்று பொருட்கள் வாங்குவது பார்ப்பதற்கே நெஞ்சைப் பதற வைக்கிறது. சாகச விரும்பிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் பெரிதும் கவர்ந்துள்ள இந்த விசித்திரமான கடை, உலகின் ‘மிகவும் ஆபத்தான கடை’ என்ற பெயரில் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.