சென்னை ஆவடி அருகே உள்ள கண்ணப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த சர்மிளா (வயது 19) என்ற இளம்பெண், திடீரென உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்மிளாவின் தந்தை சங்கர் (47), ஒரு தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளான சர்மிளா, அயப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை, சர்மிளா வழக்கம்போல் தூங்கி எழுந்தபோது, அவரது உடலில் திடீரென தீவிர அரிப்பு ஏற்பட்டுள்ளது. அரிப்பு, சில நிமிடங்களில் முழு உடலிலும் வீக்கமாக மாறியது. உடல் தோலில் உள்ள பல பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டதால், அதனை தணிக்க மஞ்சள் போட்டு குளிக்க சென்றுள்ளார்.

அதற்குள், சர்மிளா திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவசர சிகிச்சைக்காக, திருவேற்காடு மற்றும் அதன் பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஒரு நாளுக்கும் மேல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சர்மிளாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, கடந்த அகஸ்ட் 31-ஆம் தேதி மாலை, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக, ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில், சர்மிளாவின் தந்தை சங்கருக்கும் இதற்கு முன்பு விஷ பூச்சி கடித்ததால் அதேபோன்ற அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சர்மிளாவும் ஏதேனும் விஷ பூச்சி கடித்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரிடம் எழுந்துள்ளது.

இருப்பினும், உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் உறுதி செய்யப்படும் எனவும், அந்த அறிக்கையை ஆவடி போலீசார் காத்திருக்கின்றனர். இந்த திடீர் மரணம், பொதுமக்களில் பெரும் சோகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் திடீரென உடல் வீக்கம், நுரை தள்ளுதல், மரணம் என விளைந்தது விஷ பூச்சி தாக்கமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதுபற்றி உறுதி செய்யும் மருத்துவ அறிக்கை குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.