மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்துடன் மட்டுமில்லாமல் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் எங்களுக்கு நல்ல ஒருங்கிணைப்பு இருக்கிறது. பாஜகவுடன் மோதல் கிடையாது. ஆனால் எல்லா பிரச்சனைகளிலும் ஒரே நிலை எடுப்பது என்பது சாத்தியமில்லை.

நாங்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் நம்புகிறோம். நாங்க ஒருவருக்கொருவர் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். நல்ல பணிகளை செய்வதில் எங்கள் உதவி தேவைப்பட்டால் அனைவருக்குமே உதவுகிறோம். மதம் என்பது தனிப்பட்டவரின் விருப்பத்தின் அடிப்படையில் ஆனது. இதில் எந்த வசீகரமோ அல்லது வற்புறுத்தலோ இருக்க கூடாது.

சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு நாம் வேலை கொடுக்கக் கூடாது. முஸ்லிம்கள் உட்பட நமது சொந்த மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். அனைத்து இந்திய குடிமக்களும் 3 குழந்தைகளை பெறுவதை கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் மக்கள் தொகை போதுமானதாகவும், கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

அகண்ட பாரதம் என்பது வாழ்க்கையின் உண்மை. நமது கலாச்சாரமும் முன்னோர்களும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். எல்லோரும் சமமாக இருக்கும்போது இந்து- முஸ்லிம் ஒற்றுமை பற்றி ஏன் பேச வேண்டும்? நாம் அனைவரும் இந்தியர்கள். இஸ்லாம் இங்கே இருக்காது என்று இந்து சிந்தனை கூறவில்லை. மத அடிப்படையில் உட்பட யாரையும் தாக்குவதில் ஆர்.எஸ்.எஸ் நம்பிக்கை கொள்ளவில்லை என கூறியுள்ளார்.