தேனி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மூத்த மகள், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். சமீபத்தில் விடுமுறை எனக் கூறி ஊருக்கு வரவிருக்கிறேன் என்று தந்தைக்கு தகவல் அளித்திருந்தார். ஆனால், எதிர்பார்த்தவாறு வீட்டிற்கு வராமல் காணாமல் போனதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், “என்னை தேடாதீர்கள்… நான் காதலனுடன் ஓடிப் போகிறேன். யாரும் தேடி வராதீர்கள்… உங்களுக்கு தான் காசு வீணாகும்” என்ற டெக்ஸ்ட் மெசேஜ், மாணவியின் செல்போனில் இருந்து வந்தது. இதனால் குடும்பத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அவரது செல்போனும் அணைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இதையடுத்து மாணவியின் தந்தை, அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி உண்மையில் தப்பிச் சென்றாரா? அல்லது வேறு யாராவது அவரது பெயரில் மெசேஜ் அனுப்பினார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
