உத்தரகாண்டின் சாமோலி மாவட்டம் தவ்ராலி பகுதியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு ஏற்பட்ட மேகவெடிப்பு பெரும் நிலச்சரிவையும் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்தி கடும் சேதங்களை விளைவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 20 வயது பெண் கவிதா இடிபாடுகளில் புதைந்து காணப்படுகிறார். மேலும் ஜோஷி என்ற நபர் காணாமல் போனதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் வீடுகள், கடைகள், மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வரை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Uttarakhand: There is a possibility of a lot of damage due to the cloud burst in Tharali tehsil of Chamoli last night. A lot of debris has come due to the cloudburst, due to which many houses, including the SDM residence, have been completely damaged: Chamoli DM, Sandeep… pic.twitter.com/3kGNYRSMdG
— ANI (@ANI) August 23, 2025
இதே நேரத்தில், மீட்புப் பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவை முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. சாமோலி துணை மாவட்ட ஆட்சியாளர் விவேக் பிரகாஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், “திடீர் வெள்ளப்பெருக்கால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் சிக்கியுள்ளனர். சாலைகள் முடங்கியுள்ளன. நாங்கள் உதவிக் கூடாரங்களை அமைத்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் இன்று காலையில் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
மேகவெடிப்பு சம்பவம் குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது X கணக்கில் வருத்தம் தெரிவித்ததோடு, மீட்பு பணிகளை நேரடியாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். “தவ்ராலி பகுதியில் நேற்று இரவு மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. மாவட்ட நிர்வாகம், SDRF மற்றும் போலீசார் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நான் நிலைமையை ஆழமாக கவனித்து வருகிறேன். எல்லோரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பக்கம், உத்தரகாசி மாவட்டத்தின் சியானச்சட்டி பகுதியில் இடைப்பட்ட யமுனை ஆற்றின் மீது உருவான தற்காலிக ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் நிலைமை சாதாரணமாகி வருகிறது. மாவட்ட ஆட்சியர் பிரஷாந்த் ஆர்யா, நேற்று முதல் அப்பகுதியில் இருக்கும்படி மீட்பு பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். இடிபாடுகள் மூலம் ஆறு தடைபட்டு உருவான இந்த ஏரியை திறக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
