ஜம்மு மாவட்டம் அக்னூரில் உள்ள சவ்கி சௌரா பகுதியில், போலியான திருமண ஏற்பாடுகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மணப்பெண்ணாக நடித்து திருமணத்திற்கு பிறகு இரண்டே நாட்களில் தலைமறைவாகிய பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அக்னூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் வெளிச்சத்திற்கு வந்தது.

புகாரின் படி, சவ்கி சௌரா பகுதியைச் சேர்ந்த தீபக் குமார் என்பவர், டோரி டேகர் பகுதியைச் சேர்ந்த ரஷ்பால் சந்த் என்பவரிடம் யூனியன் பிரதேசத்துக்கு வெளியே மனபெண் இருப்பதாக கூறி, ரூ.3 லட்சம் கேட்டுள்ளார். திருமணம் நடைபெற்றதற்குப் பிறகு, மணமகள் மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டே நாட்களில் தப்பி சென்றுள்ளனர். அதேபோல பலரிடம் மோசடி செய்தது போலிசார் விசாரணையில் உறுதியானது.

இந்த குழு, ஒரு போலி திருமண முகாம் என்ற பெயரில் முழு திட்டமிடலுடன் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. மணப்பெண், பண்டிதர், திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் கும்பலே ஏற்பாடு செய்து, திருமணம் முடிந்ததும் மணப்பெண் ஏதேனும் காரணம் கூறி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

சமூக அழுத்தம் காரணமாக, பலர் இதுபோன்ற மோசடிகளை புகாரளிக்காமல் விட்டுவிடுவதால், இந்த கும்பல் தொடர்ந்து பலரை ஏமாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தற்போது ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண வாய்ப்பு இல்லாதவர்கள் மற்றும் வயதை கடந்த நபர்களை இலக்காகக் கொண்ட இந்த மோசடி கும்பலை மக்கள் விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகள் நடந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என ஜம்மு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.