திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ராயபாளையத்தைச் சேர்ந்த செந்தில், திருப்பூர் அண்ணாநகர் பகுதியில் வணிக நிறுவனம் நடத்தி வந்தார்.

சமீபத்தில் அவர், ஆட்டோ பார்க்கிங் வசதி கொண்ட புதிய சொகுசு காரை வாங்கியிருந்தார். இதனால் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். காரை தானாகவே நிறுத்தும் ஆட்டோ பார்க்கிங் முறையை, தனது நிறுவன வளாகத்தில் பலமுறை பயன்படுத்தியும் பார்த்திருந்தார்.

கடந்த வாரம், தனது நண்பர்களுக்கு இந்த ஆட்டோ பார்க்கிங் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்கிக்காட்ட முயன்றபோது, கார் பாதியிலேயே நின்றது. உடனே கதவைத் திறந்து பார்ப்பதற்குள், கார் திடீரென பின்னோக்கி நகரத் தொடங்கியது. அதை நிறுத்த முயன்ற செந்தில், கதவு திடீரென அவரை மோதி அவர் தரையில் விழுந்தார். அதே சமயம், கார் சக்கரம் அவரது கால்கள் மீது ஏறி இறங்க, தலையிலும் கடுமையான காயம் ஏற்பட்டது.

“>

 

உடனே அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து காரை நிறுத்தி, காயமடைந்த செந்திலை மீட்டு, கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், புதிய காரின் ஆட்டோ பார்க்கிங் வசதி விபரீதமாக மாறி உயிரைப் பலிகொண்டது என்ற செய்தி திருப்பூர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.