தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் அரசியல் மேடையிலும் களம் கண்டவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. ஆரம்பத்தில் விஜயகாந்த்தின் ஆதரவோடு பல படங்களில் இணைந்து கலக்கி வந்த அவர், பின்னர் ஏற்பட்ட சில தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக அவரை எதிரியாகவே கருதி 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்து மேடைகளில் விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்தார்.
ஆனால் அதற்குப் பதிலாக விஜயகாந்த் ஒருபோதும் வடிவேலுவைப் பற்றி எதிர்மறையாக பேசியதில்லை. இதனால், அப்போது ஏற்பட்ட பிளவு வடிவேலுவின் சினிமா வாழ்க்கையையும் பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காலப்போக்கில் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் போய், 2023ஆம் ஆண்டு மறைந்தார். அப்போது வடிவேலு அவரது இறுதிச் சடங்கிற்கு வராதது பெரும் சர்ச்சையாக மாறியது. இதுகுறித்து வடிவேலு தரப்பினர், “அவர் வந்திருந்தால் தேவையில்லாத பிரச்சினைகள் எழுந்திருக்கும் என்பதால் வரவில்லை” என விளக்கம் அளித்தனர். ஆனாலும், இந்த நிலைமை பலரிடமும் கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில், விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியன் சமீபத்தில் ஒரு பட விழாவில் பேசுகையில், “எங்களது சொந்த மாமாவைப் போலத்தான் வடிவேலு மாமாவையும் பார்த்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு போய்விட்டார். அந்த சின்ன வயதிலேயே நாங்கள் துரோகத்தை பார்த்துவிட்டோம். அதனால் இப்போது யார் என்ன செய்தாலும் எங்களுக்கு அதிர்ச்சி இல்லை” என உணர்ச்சிகரமாக பேசியது, சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது
