கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லியூர் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ராஜேஷ்( 36) என்பவர் தனது மனைவி ஷிபுவை (31) உணவு சரியான நேரத்தில் பரிமாறாததால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்தக் கொடூரமான செயல் ஆகஸ்ட் 12, 2025 அன்று நடந்ததாகவும், மனைவியை கொலை செய்த பிறகு, ராஜேஷ் இரவு முழுவதும் அவரது உடலுக்கு அருகில் உறங்கியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மறுநாள் காலையில், ராஜேஷ் தனது இரு குழந்தைகளை எதுவுமறியாதவர் போல் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஷிபு உடல்நலமில்லாமல் இருப்பதாக பக்கத்து வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது மாமியார், ஷிபுவை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் சந்தேகமடைந்து, அவர்களது வீட்டிற்கு வந்தபோது, ரத்த வெள்ளத்தில் ஷிபுவின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் காவல்துறையை அழைத்ததை அடுத்து, ராஜேஷ் கைது செய்யப்பட்டார். அதன் பின் ஷிபு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறையின் ஆரம்ப விசாரணையில், ராஜேஷ் மற்றும் ஷிபு இடையே அடிக்கடி ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்கள் இந்தக் கொலைக்கு வழிவகுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் இத்தகைய பயங்கரமான முடிவுக்கு கொண்டு சென்றது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தச் சம்பவம், குடும்ப உறவுகளில் தொடர்பு மற்றும் புரிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை தேவையை மீண்டும் நினைவூட்டுகிறது.
