மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாடு இன்று நடைபெற்றது.

ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, ராமதாஸின் பேரன் சுகுந்தன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த மாநாட்டில், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்துதல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துதல், முழு மதுவிலக்கு அமல்படுத்துதல், போதைப் பொருட்களை ஒழித்தல், உயர்கல்வி பெண் மாணவிகளுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்குதல் உள்ளிட்ட மொத்தம் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், வன்னியர் இடஒதுக்கீட்டை சட்டமன்றத்தில் நிறைவேற்றியபடி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதோடு, மகளிர் பல்கலைக்கழகங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

நீட் தேர்வு மையங்களில் பெண்களுக்கு நடத்தப்படும் சோதனை பெயரில் ஏற்படும் அவமானங்களை கண்டித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண்களுக்கு வேலை நாட்களை அதிகரித்து, தினக்கூலியை உயர்த்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரவும், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய ராமதாஸுக்கு நன்றி தெரிவித்து, அவரது மூத்த மகள் காந்திமதி தீர்மானங்களை வாசித்தார். மாநாட்டை முன்னிட்டு, திருச்சி மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டன.