மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில், ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, பேரன் சுகுந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு உள்ளிட்ட 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் உரையாற்றிய ராமதாஸ், “பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை. இவ்வளவு சிறப்பான மாநாட்டை வேறு யாராலும் நடத்த முடியாது. இத்தகைய கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் நன்றி” என்றார். மேலும், “2026-ல் நீங்கள் நினைப்பது போன்று வெற்றிக் கூட்டணி அமையும். அதை நான் அமைப்பேன். யார் எது சொன்னாலும், நான் சொல்வதுதான் நடக்கும். வேறு யார் சொன்னாலும், அதை நீங்கள் கேட்க வேண்டாம்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, “ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் குறித்து அண்மையில் நடந்த விழாவில் பிரதமர் மேடையில் பேசியது அருமை. தந்தையை மிஞ்சிய மகன் இருக்கக் கூடாது; அதற்கு உதாரணம் பெரிய கோயிலும் கங்கை கொண்ட சோழப்புர கோயிலும் என எடுத்துக்காட்டாக கூறியுள்ளார். இதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “மறைந்த கலைஞர் எனது நண்பர். அவர் 20% இடஒதுக்கீட்டை வழங்கியதால் மக்கள் பயனடைந்தனர். ஆனால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தத் தயங்குகிறார்? அதை நடத்தி சமூக வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும். தந்தையை மிஞ்சி செய்யக் கூடாதா? உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்து நடத்த வேண்டும்” என்று அன்போடு கோரிக்கை விடுத்தார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிய நிலையில் இன்று நிறுவனர் ராமதாஸ் கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை  புகழ்ந்து  பேசியது திமுகவுடன் கூட்டணிக்கான சுசூசகமா என்று தமிழக  அரசியலில் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.