சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, தென்னிந்தியக் கடல் மேற்பரப்பில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) முதல் ஆகஸ்ட் 16 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், வெப்பநிலை 100 ஃபாரன்ஹீட்டுக்கு கீழே குறைந்தது.

மீனவா்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 11 முதல் 14 வரை தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் இந்தக் காலப்பகுதியில் அந்தப் பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.