கடலுர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கம்மாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன் (39). இவர் தனது தாய் பத்மாவதி (70)யிடம் சொத்தை பிரித்து தரக் கோரி கடந்த 22-ம் தேதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முன்பே மறைத்து வைத்திருந்த ஏர்கன் வகை துப்பாக்கியை எடுத்து, தாயை தொடை மற்றும் தோள்பட்டை பகுதியில் சுட்டுள்ளார். இந்த திடீர் தாக்குதலில் பத்மாவதி காயமடைந்து அதிர்ச்சிக்குள்ளானார்.
தாய் காயமடைந்ததைத் தொடர்ந்து அச்சமடைந்த வீரபாண்டியன், யாருக்கும் தெரியாமல் அருகிலுள்ள மெடிக்கல் ஷாப்பில் அவருக்கு முதலுதவி செய்தார். பின்னர், விருத்தாச்சலம்-பெண்ணாடம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயங்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், பத்மாவதி சிகிச்சை முடிந்து நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அதிகாரிகளிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வீரபாண்டியன் தாயை துப்பாக்கியால் சுட்டது உறுதியாகியுள்ளது. ஆனால், சம்பவம் நடந்த அதே நாளில், கம்மாபுரம் தனிப்பிரிவு காவலர் எஸ்.பிக்கு தகவல் தராமல், போலீசார் வழக்குப் பதிக்காமல் பேச்சுவார்த்தையில் முடிக்க முயற்சித்தது விசாரணையில் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சி மற்றும் தனிப்பிரிவு காவலர் சரவணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை ஆயுதப்பிரிவுக்கு மாற்றி,கடலுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தாயின் மீது துப்பாக்கி ஏந்தி தாண்டவம் ஆடிய மகன் வீரபாண்டியனை கைது செய்ய போலீசார் தீவிரமாக தடையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
