திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலம் ஊட்டியாணி காலனி தெருவை சேர்ந்த ரமேஷ் (49) என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்வி (39) என்ற மனைவியும், வினித் (24), விக்ரம் (22) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று இரவு, ரமேஷ் வீட்டின் வாசலில் மதுவை அருந்திக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மூத்த மகன் வினித் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் செல்வி வீட்டின் பின்புறம் காயவைத்திருந்த துணிகளை எடுக்கச் சென்றார். அப்போது ரமேஷ், தனது மனைவியை படுக்கைக்கு வருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் செல்வி, மகனுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டியிருப்பதாக கூறி மறுத்துள்ளார். இது குறித்து வாக்குவாதம் மோசமாக மாறிய நிலையில், ரமேஷ் செல்வியை கீழே தள்ளி, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். செல்வி கூச்சலிட, குரோதத்துடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி கயிற்றை பயன்படுத்தி அவரை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

உடனே தகவலறிந்த வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று செல்வியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில், மாவூர் ரெயில்வே கேட் அருகே பதுங்கி இருந்த ரமேஷ் பிடிபட்டார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம், திருவாரூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.