திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த வெள்ளைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் சப்தகிரி (32). அவர் முட்டை மொத்த வியாபாரம் செய்யும் செல்வராஜ் என்பவரின் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று இரவு 9 மணி அளவில் வழக்கம் போல முட்டைகளை கொள்முதல் செய்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவரிடம் முட்டை கொள்முதல் செய்வதற்காக செல்வராஜ் சப்தகரியிடம் ரூபாய் 10 லட்சம் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். அதனை சப்தகிரி லாரி டிரைவர் இருக்கையின் கீழ் வைத்துவிட்டு சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து லாரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு அழுக்கு பாலம் அருகே அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

திடீரென லாரியை நிறுத்திய சப்தகிரி இயற்கை உபாதை கழித்துவிட்டு மீண்டும் லாரியில் ஏற முயன்றார். அப்போது அந்த வழியே வெள்ளை காரில் வந்த 3 நபர்கள்  சப்தகரியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு பணத்தை  திருடிவிட்டு திருச்சி செல்லும் சாலை வழியாக வேகமாக தப்பித்துச் சென்றனர்.

பணத்தை பறி கொடுத்த சப்தகிரி உடனே விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இச்சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் பணத்தை கொள்ளை அடித்து சென்ற கும்பலை விக்கிரவாண்டி காவல்துறையினர் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூபாய்  9,60,000 மீட்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று குற்றவாளிகள் கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் சென்னை கோயம்பேட்டில் நின்றிருந்தது.

அதனை கவனித்த காவல்துறையினர் அந்தக் காரில் சோதனை செய்தனர். அப்போது காரில் பிரவீன் கோயிலராஜ், முத்துக்குமார் மற்றும் சதீஷ் ஆகியோர் இருந்தனர். அவர்களை விசாரித்த போது முட்டை வியாபாரியின் ஓட்டுனரிடம் கொள்ளையடித்த சம்பவத்தை ஒப்புக்கொண்டனர்.

இதை அடுத்து மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் செலவு செய்து போக மீதம் இருந்த பணத்தை காவல்துறையினர் மீட்டனர்.